திங்கள், மார்ச் 29, 2021

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. அதற்குள் எழுந்தான். தூக்கத்தில் இருந்து அல்ல. இரவெல்லாம் கண்ட கனவிலிருந்து. இப்படி ஒரு நிகழ்வு யாருக்கும் அமைந்திருக்குமா என தெரியாது. ஆனால் அவனுக்கு அமைந்தது அதிர்ஷ்டம் தான். அதிகாலையில் பெண் பார்க்கும் வைபவம். சட சட வென பாய் மற்றும் போர்வைகளை சுருட்டி பக்கத்தில் படுத்திருந்த ராகேஷ்க்கும் தான் எழுந்தது தெரியும் படி பெருமூச்சு ஒன்று விட்டான். அவனோ கண் திறந்தால் தூக்கம் தப்பித்து ஓடிவிடும் என தெரிந்தவனாய் இறுக்கி பிடித்து வைத்து கொண்டிருந்தான். சிவப்பு வாளி பாதிக்கும் மேல் ஓட்டை என்பதால் நீல வாளி எடுத்து குளிக்க கிளம்பினான். வெறும் விரல் நுனியை நனைத்தற்கே உடல் முழுதும் நடுங்கியது. இதில் எப்படி உடல் முழுதும் நனைப்பது என நினைத்து கொண்டே முதல் கப் தண்ணிரை தலையில் ஊற்றினான் சேதுபதி. 

 தலை துவட்டிக் கொண்டே வெளியில் வந்து கண்ணாடியில் தன் பளிச் முகத்தை பார்த்தாள் ஊர்வசி. நேரம் ஐந்தை தொட்டுக்கொண்டிருந்தது. தலை நிறைய மல்லியும், கைகளில் கண்ணாடி வளையல்களும், கால்களில் கெட்டி கொலுசும் கொண்டு புறப்பட்டு தயாரானது அந்த மஞ்சள் சுடிதார் கிராமத்து மைனா. முதல் நாள் இரவே தேவையான அனைத்தையும் எடுத்து வைத்ததால் பாதி வேலை இல்லை. மேக்கப் போடும் பழக்க வழக்கம் இல்லை என்பதால் மீதி வேலையும் இல்லை. சீக்கிரம் கிளம்பி வெளியே வந்தாள் சிட்டு போல. அவளுக்கும் முன்னரே எழுந்து கிளம்பி வாசலில் உட்கார்ந்திருந்தார் அவளின் அப்பா ராஜேந்திரன். இருவரும் நுங்கம்பாக்கம் இரயில் நிலைத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு இரயிலுக்காக உட்கார்ந்தனர். 
 
காலை 5:30 மணி. உறைந்திருந்த பனியை தன் சத்தத்தால் கிளித்துக் கொண்டு வந்து நின்றது மின்சார இரயில். பெண் பார்க்க போகும் முன்னரே பெண்கள் பெட்டியின் முன்னால் நின்று விட்டான் சேது. பிறகு ஓடிச் சென்று பொதுப் பெட்டியில் ஏறிக் கொண்டான். 'இது ஊரப்பாக்கம் இரயில் நிலையம். சேருமிடம் சென்னைக் கடற்கரை' என்று இடைவிடாது மூன்று மொழிகளில் முழங்கி கொண்டிருந்தாள் அந்த தானியங்கி ஒலிப்பான். எண்ணிப்பார்த்தால் இவனையும் சேர்த்து ஆறு பயணிகள். சன்னலோர சீட்டில் சாவகாசமாய் உட்கார்ந்தான். வண்டி முன் செல்ல காற்றும், மின்கம்பங்களும், கற்களும் பின்னால் சென்றது. பெருங்களத்தூரை கடக்கும் போது தான் அவன் நினைவும் பின்னால் சென்றது. நான்கு மாதங்களுக்கு முன் அவன் அப்பா, அம்மா ஊரிலிருந்து வந்து அவனை பார்த்துவிட்டு சென்ற நியாபகம். பெருங்குளத்தூரில் பேருந்து ஏற்றிவிடும்போது அவன் அம்மா அழுதது சாரல் போல் அவன் இதயத்தில் தெறித்தது. 'இந்த பொண்ணாவது உனக்கு அமைஞ்சிரும்னு பார்த்தோம். இதுவும் அமையல. எப்போ தான் உனக்கு ஒரு விடிவுகாலம் வருமோ' என அம்மா கூறிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்து கொண்டிருக்கும் போது சுளீர் என்று சூரிய வெளிச்சம் அடித்தது. நினைவிலிருந்து மீண்டான். தானியங்கி ஒலிப்பான் ஒலித்தது. 

 'இது மீனம்பாக்கம் இரயில் நிலையம், சேருமிடம் செங்கல்பட்டு இரயில் நிலையம்' பெரிய மற்றும் சின்ன பையை அவளின் அப்பா எடுத்துக்கொண்டு இறங்க கைப்பையுடன் மட்டும் அவள் இறங்கினாள். இரயில் மெதுவாக நகர துவங்கியதும் ராஜேந்திரன் செல்போனை எடுத்து '46' என முடிந்த அந்த போன் நம்பரை தேடினார். கடைசி ரெண்டு மூனு நம்பரை நியாபகத்தில் வைத்து கொள்ளவதே பெரியோர்களின் யுக்தி. சரியாக அந்த நம்பரை எடுத்து பச்சை பட்டனை அழுத்தினார். போன் ரிங் போகவில்லை. சிவப்பை அழுத்தி மீண்டும் பச்சையை அழுத்தினார். அதே தான் மீண்டும். தன் மகளை பார்த்து அவள் போனில் ஒரு முறை போன் பண்ண சொன்னார். அவள் சிறிது வெட்கம் கலந்த தயக்கத்துடன் டயல் செய்து காதுக்கு சிறிது தொலைவில் வைத்தாள். இந்த முறையும் நம்பர் தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் இருந்தது. இனி காத்திருந்து பயனில்லை என்று ஏர்போட் நோக்கி நடக்க தொடங்கினர் இருவரும். அப்பாவின் நடையில் மாற்றத்தை கண்டாள். இந்த முறையும் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் கடமை நிறைவேறாமல் போனதால் வந்த வருத்தம் தந்த நடுக்கம். புரிந்து கொண்டவளாய் சின்ன பையை தான் வாங்கி கொண்டு அப்பாவின் கையை பிடித்து நடந்தாள். சென்னை விமான நிலையம் வெளிநாட்டு புறப்பாடு டெர்மினல் மூன்றாவது முறை அவளை அன்புடன் வரவேற்றது. ஆறுமாதம் அமெரிக்க புராஜெக்ட். ஆறுமாதம் இந்திய புராஜெக்ட். இது தான் கடந்த மூன்று வருடங்களாக மாப்பிளை தேடலுக்கு மத்தியில் அவள் பணிபுரியும் வேலை. 
 
வேலைக்கு இன்று ஒரு மணி நேரம் பெர்மிசன் என்ற தகவல் அனுப்புவதற்காக போனை எடுத்தான் அவன். அப்போது தான் தெரிந்தது நெட்வொர்க் இல்லாமல் பொம்மை போனாக இருந்தது. ஒரு முறை ஆஃப் செய்துவிட்டு ஆன் செய்தான். இரயில் நின்றது. இறங்கியதும் தன் முழு நெட்வொர்க்குடன் ஆன் ஆனது அவனது மொபைல். வரிசையாய் மூன்று மிஸ்டுகால் மெசேஷ். இரண்டு அவன் சேமித்து வைத்த ஊர்வசி அப்பா என்னும் நம்பர். இன்னொன்று ஒரு புதிய நம்பர். புதிய நம்பர் யாரென்ற குழப்பத்தில் முதலில் அந்த நம்பருக்கு போன் செய்தான். 'அப்பா அவங்க தான் பேசுறாங்க' என்ற கபடமற்ற அந்த குரலையும், வார்த்தையும் கேட்டவன் முதன்முதலாய் அவன் வாழ்வில் விடியலை உணர்ந்தான். அப்பாவிடம் அவன் நெட்வொர்க் பிரச்சனையை சொல்லிக் கொண்டிருக்கும் போது விமான நிலைய தானியங்கி ஒலித்தது. 'Last Five more minutes for USA flight check-in, passengers are requested to checkin immediately' என்ற சத்தம் அவனுக்கு போனில் கேட்டது. 'அப்பா அவுங்கள சீக்கிரம் டி4 டெர்மினல் வரச் சொல்லுங்க' என அவள் கூறியதும் கேட்டது. அப்பா அதை திரும்ப சொல்லும் முன்னே அவன் தான் இரயில்வே ஸ்டேசனிலிருந்து கிளம்பிவிட்டதை சொல்லிவிட்டு வேகமாக நடக்க தொடங்கினான். 
 
முன்ன பின்ன ஏர்போர்ட் சென்றிதாத அவனுக்கு டி4 எப்படி போக வேண்டும் என தெரியவில்லை. இரயில்வே சப்வேயில் இறங்கி எந்த பக்கம் செல்வதென்று தெரியாமல் எதிர்பக்கம் சென்று விட்டான். வழியில் ஆட்களும், போர்டுகளும் தென்படவில்லை. இருந்தாலும் அலசி பார்த்து கண்டுபிடித்துவிடலாம் என்ற அலட்சியத்துடன் தவறான பக்கமே வேகமாக சென்று கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு போன் செய்ய போனை எடுத்தான். மீண்டும் நெட்வொர்க் பிராபளம். ஆஃப் செய்தான். 
அதற்குள் அந்த வழியாக ஒரு கால் டாக்ஸி சென்றது. வழி மறித்து கேட்டான். டாக்ஸி டிரைவர் காட்டிய பாதை அவன் வந்த திசை. நெற்றியில் அடித்துக் கொண்டு அவருக்கு ஒரு டாங்க்ஸ் சொல்லிக் கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினான். இந்த இடைப்பட்ட நேரத்தில் போனை ஆன் செய்ய மறந்தவிட்டான். தனக்கு நேரமாச்சு என அவள் செய்த கால் அரை கிமீ அருகில் இருந்த அவனை சென்று சேரவே இல்லை. அவளின் நான்கு அழைப்புகளுக்கு பின் அவளின் பெயரை ஒலிப்பானில் அழைக்க வேறு வழியின்றி உள்ளே செல்ல தயாரானாள். கிட்டத்தட்ட டி4 உள்ளே வந்த அவனுக்கும் அவளை அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் கண்ணாடி கதவினுள் நுழையும் போது அவன் அங்கே வந்து சேர்ந்தான். அப்பா ஊர்வசி என அவளை அழைக்க முயன்ற போது வேண்டும் என தடுத்து அவள் அந்த கண்ணாடி கதவிலிருந்து தூரத்தில் சென்று மறைவதை மரம் போல பார்த்து கொண்டிருந்தான். மல்லிப்பூ, வளையல், கொலுசு என மூன்று மட்டுமே அவன் கண்களிலும், அதில் சிந்திய ஒரு துளி கண்ணீரிலும். 

 பி.கு: வாட்ஸ்ஆப்ல வீடியோ கால் பண்ணி பேசிக்கலாம். இதுக்கா இவ்வளவு பில்டப் என கேட்பவர்களுக்கு - இது ஒரு 90's kids காதல் கதை.

சனி, மார்ச் 06, 2021

இரு சொட்டு கண்ணீர் துளி

அனலாய் கொதித்தது உடல்

அதிகமாய் துடித்தது இதயம்

எதற்கு இந்த அக்னிபரிட்சை

வசமாய்வந்து இப்படி மாட்டுவேனோ

கற்கண்டு கசந்தும் கடித்து கொண்டே

ரோஜாவுடன் ஒரு யுத்தம் நடத்தி

முடிவில் போகட்டும் என எடுத்து

சந்தனம் குங்குமம் சகிதம் முடித்து

சங்கடத்துடன் சிறுமுருவலுடன் முன்னேற்றம்!

உள்ளே குடும்பமாய் ஒரு கூட்டம்

நண்பர்கள் கூட்டம் மறுபக்கம்

கூட்டமின்றி குற்ற உணர்ச்சியுடன்

ஓரம்கட்டிய ஒற்றை மரமாய் நான்!

இந்த மாலை நமக்கு வாய்ப்பில்லை என்ற

கவலை கண்ணீர் ஒரு கண்ணில்.

அந்த மாலையுடன் நிற்கும் தங்கைக்காக

ஆனந்த கண்ணீர் மறு கண்ணில்.

கெட்டிமேள சத்தம்! பூக்கள் பறந்தன!

அனிச்சையாய் கவலை கண்ணீரை

துடைத்தது கைக்குள் இருந்த கைக்குட்டை.

மேடை - குற்றவாளி கூண்டாய் தெரிந்தது

புகைப்படம் - என்றும் ஒரு வடுவாய் அமையும்

வேண்டாம் என ரெண்டையும் கடந்தால்

பந்திக்கு முந்திய படைவீரர் கூட்டம்

ஒற்றை இருக்கை கிடைத்தும்

உட்கார்ந்ததும் வெறிச்சோடின

பயந்த பக்கத்து இருக்கைகள்!

பந்திக்கு பின்வாங்கியதும் மீண்டும்

படையெடுத்தன பக்கத்து இருக்கைகள்.

அடுத்த அடியெடுத்து வைத்த இடம்

மொய் எழுத மொய்த்த கூட்டம்

கல்லெறிந்ததும் கலையும் காக்கை கூட்டமாய்

கலைந்து சென்றது அந்த கடைசி இடமும்

கடமையை செய்து கடந்தேன் கடைசியில்!

மண்டபத்தின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என

அந்த ஆனந்த கண்ணீரையும் துடைத்தது

ஈரமாய் இருந்த அதே கைக்குட்டை

திருமணத்திற்கு வந்த திருநங்கை நான்!

வியாழன், ஆகஸ்ட் 27, 2020

மெய்க்கு அப்பால்..

 எவ்வளவு நேரம் தான்

இங்கேயே இருப்பது...


எல்லாமே செய்தாகிவிட்டது

செய்வதற்க்கென்று எதுவுமில்லை....


சென்று வரலாம்

ஒரு சிறிய நடைபயணம்

என கிளம்பினேன்...


துணைக்கு யாரை அழைக்கலாம்

எல்லாரும் தூங்குகின்றனரே....


வெளியில் ஒரு குரல்

சென்று பார்த்தேன்

‘போலாமா?’ என்றான் வந்தவன்....


இருவரும் நடக்க ஆரம்பித்தோம்...

நடந்ததையெல்லாம்

பேசிக் கொண்டே நடந்தோம்..


சுற்றி வளைத்தது ‘கும்மிருட்டு’

சற்று தூரம் சென்றதும்...


உயரத்தில் பளிச்சென எறிந்தது

வெள்ளை நிற விளக்கு...


எடுத்துக் கொண்டான்

என்னுடன் வந்தவன்....


விளக்கின் வெளிச்சத்தில்

விலக்கினோம் ‘கும்மிருட்டை’....


கரடுமுரடான் பாறைகளில் நடந்து சென்றோம்

கடுமையான  புழுதிபுயலையும் கடந்து சென்றோம்...


தூரத்தில் ஆங்காங்கே

ஒற்றைப் புள்ளியாய் மின்னுகின்றனவே...

இன்னும் யார்யாரோ

எங்களைப் போல் பயணிக்கின்றனர் போல...


தூரத்தில் செல்ல செல்ல

இருளில் விளக்கு தேயவும்,

குளிரில் உடம்பு காயவும்

ஆரம்பித்தன....


‘உம்’ கொட்டிக் கொண்டு வந்தானே

‘எங்கே அவன்?’

திரும்பி பார்த்தேன்... இல்லை அவன்


திரும்பி விட நினைத்தேன்.... வந்த வழியில்


குளிரிலும், இருளிலும்

நடுங்கியது

உடலும், இதயமும்....


தூரத்தில் தெரிந்தது நெருப்பு

அருகில் சென்று குளிர் விரட்டினேன்...


பின் அலைந்து திரிந்து வீடு அடைந்தேன்...

குளிர்சாதனப் பெட்டியில் நான்.!!!


ஒரு கவிஞனின் மரண_வாக்குமூலம்...



விளக்கவுரை:

வெள்ளை விளக்கு-நிலா

கரடுமுரடான பாறைகள்-கோள்கள்

மின்னும் ஒற்றைப் புள்ளிகள்-நட்சத்திரங்கள்

தூரத்து நெருப்பு-சூரியன்

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2020

அவளும் நிகர் தானே!


ஒரு கணத்த சங்கிலி எப்போதும்
அவளின் காலில் பிணைக்கபட்டே உள்ளது.
ஒரு வட்டக் கூண்டு எப்போதும்
அவளை சுற்றி அடைக்கப்பட்டே உள்ளது.
ஒரு அடிமை சட்டம் எப்போதும்
அவளை கட்டுப்படுத்தி கொண்டே உள்ளது.

கள்ளிப்பால் வறண்டு விட்டாலும்
பெண்பால் பல உயரங்களில் கால் பதித்தாலும்
மாறாமல் தொடர்கிறது பாலின பாகுபாடு!

சமைத்தலும், துவைத்தலும் - பெண்களுக்கே!
அடக்கமும், அழுகையும் - பெண்களுக்கே!
மென்மையும், பொறுமையும் - பெண்களுக்கே!
வரதட்சனையும், வழ்புணர்ச்சியும் - பெண்களுக்கே!
தலைமையும், அதிகாரம் மட்டும் - ஆண்களுக்கு!!

சம்பாரித்தாலும் வீட்டுக்கு அவள் தான் சமையல்காரி.
சாதித்தாலும் வீட்டுக்கு அவள் தான் வேலைக்காரி.

விதிவிலக்காய் ஆண் வீட்டுவேலை செய்தாலும்
சமூக இலக்கணத்தில் அது அவமானமே!

அவளும் நிகர் தானே!
இல்லத்து அரசனாய் பெருமிதம் கொள்வோம்!
இலக்கண பிழையாவோம்
நம் இல்லத்து (அ) உள்ளத்து அரசிக்காக!!

புதன், ஜூலை 29, 2020

ஐங்குறு ஹைக்கூ...!


என் செல்பேசியின் சுவர்சித்திரமானாய் நீ...
அன்று முதல்
என் செல்பேசியும்
என் சொல்பேச்சு
கேட்க மறுக்கிறது...!


******


அவசரநிலை பிரகடனம்,
அருகில் நீ வந்தாலே...
என் மனதிற்குள்...!


******


என் இதயத்தின் மெளனம் மட்டுமல்ல
உன் இதழின் மெளனம் கூட மரணம் தான் எனக்கு...!


******


வானவில் வண்ணம் தானே?
இங்கு மட்டும் என்ன
இரு வானவில்கள் கரு நிறத்தில்
கண்ணை பறிக்கின்றன...!

******

என் இமைகளுக்குள்
விழிநீரால் வரைந்த சித்திரமா நீ?
இமை முடியும் தெரிகிறாயே...!


சனி, செப்டம்பர் 28, 2019

We Heartily Welcome you!!!!!

To my Dear FRIENDS,

We heartily welcome all for our Wedding Event on 3rd November 2019 7:45AM at Madurai.

We are expecting your valuable presesence and wishes.

The live video of our wedding will become active on 3rd November 7AM onwards.

Have a Great Day!!!!

வெள்ளி, ஜூன் 29, 2018

எல்லாம் ஒன்றல்ல.. எல்லாம் வேறு வேறுமல்ல...

'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்'

வள்ளுவனின் வாக்காகிய இந்த வாசகம் எல்லோருக்கும் பொருந்தாது.
சாதாரண வெகுஜன மக்கள் இந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
ஆனால் அரசாங்கம் திட்டமிடுதலில் இது போன்று ஒப்புமையை காண முடியாது.  சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை துல்லியமாக கணக்கிட்டு இடம், சமூகம், பருவநிலை, நிலஅமைப்பு, கல்வியறிவு என அனைத்தையும் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்க வேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

அது சரி, எதோ ஒரு குக்கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசும் முனுசாமியையும், பட்டணத்தில் முகநூலில் இரசிகனாய் சண்டையிடும் அரவிந்தசாமியையும் எப்படி அளப்பது?

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் அனைவரும் சமம் என எழுதிய பின் எழுந்த கேள்வி. பரந்து விரிந்த இந்த இந்தியாவில் சமூக, பொருளாதார காரணிகளை எப்படி அளப்பது? குறை தெரிந்தால் நிரப்பி விடலாம் அல்லவா. ஆனால் குறைவான மக்கள்தொகை உள்ள நாடு அல்லவே. எனவே மதிப்பிடுதல், செயல்படுத்தல் இரண்டும் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையேல் இந்தியா உலக அளவில் ஸ்திரதன்மை இழந்துவிடும். இவற்றை களையவே திட்டக்குழு அமைக்கப்பட்டது. அதற்க்கும் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் தான்.

முதல் குழுவின் முதல் உறுப்பினர் ஆனார் பிரசண்ட சந்திர மஹலனோபிஸ். அவர் அளித்த 'தரவு ஆய்வு'(Data Analysis) முறை தான் இன்று பல்வேறு இடங்களில் பல்வேறாக பயன்படுகிறது. அந்த முறையை அவர் முதன்முதலில் பயன்படுத்தியது நமது முதல் ஐந்தாண்டு திட்டத்திற்கு தான்.

இன்று அவரது 125வது பிறந்தநாளை பெருமைபடுத்தும் விதமாக கூகுள் டூடுள் வெளியிட்டு அவரை பெருமைபடுத்தியுள்ளது.

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...