வியாழன், ஜூலை 18, 2013

என் நண்பனின் கவிதை

நமது நான்காண்டின் கையெழுத்து புத்தகம்
இந்த கவிதை...!
இதன் வார்த்தை என்னுடையது
வாழ்க்கை நம்முடையது
முதல்நாள் பெயர்களை பகிர்ந்து கொண்டதாக
ஞாபகம்...அன்றிலிருந்து
உணவு, உடைமை, உணர்வு என்ற பரிமாற்றங்களால்
நமது உறவு நட்பு என்னும் உறுமாற்றமானது

காந்தங்களில் துருவ பாகுபாடு உண்டு
ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள
கல்லாரி நட்பில் எந்த பாகுபாடும் இல்லை
இதயங்கள் இணைந்து கொள்ள
கேலிவதை சட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை
கேலி செய்வதுதான் எங்கள் நட்பின் விதை

விளையாட விடுமுறை விரும்பும் மாணவர்கள் மத்தியில்
விளையாட விடுமுறை தவிர்த்தவர்கள் நாங்கள்...!
இடைவேளைகள்...
பெண் பார்க்கச் செல்லும் ஐதீகம்
அரங்கேறும் நேரங்கள்

கோவில்...
கோவிலில் இருப்பது என்னவோ விநாயகர்தான்
நாங்கள் தரிசிக்க செல்வதோ சில லெட்சுமிகளை...!

வரலாற்று புத்தகங்களில் இடம்பெறும் போர்களையெல்லாம்
முதல் ஆண்டிலேயே முடித்தவர்கள்-நாங்கள்

பேருந்தைக்காட்டிலும் பேருந்து நிறுத்தங்களில் அதிகம்
நின்றவர்கள் நாங்கள்தான்
காதலுக்காக சிலர்...காரணங்களுக்காக சிலர்
நட்பிற்காக எல்லோரும்...!

படிப்பது என்னவோ இயந்திரவியல் துறை...துறைதோறும்
தோழிகள் இல்லா தோழர்கள் எனக்கில்லை

இந்தக்காலத்தில்
சில்லறை சப்தங்களைவிட சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு இவ்வுலகே இரவல்கேட்டு கெஞ்சும்

செய்முறை வகுப்புகள்
பேனாவை சண்டையிடவைத்து
நாங்கள் சிரித்த நினைவு தொகுப்புகள்...!

கல்லூரி முழுவதும் எங்கள் காலடி படாத இடமில்லை
எங்களுள் காதலில் அடி படாதவர்களும் இல்லை

வார்த்தையால் சொல்ல இயலாத
நினைவுகள் என்னோடு...
அவையெல்லாம் நான்
இருந்த காலங்கள் உன்னோடு...

தேர்வுகள்...
கவிதைக்கு காகிதங்கள் இலவசம்...

farewell
இதுதான் கடைசி நாள்
கடைசி விளையாட்டு
கடைசி சந்திப்பு என்று சொல்லும்
ஒவ்வொரு முறையும், ஒரு தூக்கு கைதியின்
கடைசி இரவுபோல நிமிடங்களில் கழிகின்றன...ஆறுதல்

மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்...
இன்று மழைத்துளியாய் பிரிய போகிறோம்
கல்லூரிக்கூட்டில் சிறகு வளர்த்தோம்...
இன்று வானம் நோக்கி பறக்க போகிறோம்...

என்றும் நம் நினைவுகள், மலை போல
காலம், கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்துவிடுவதில்லை...!

 Specially for hostellers 

கிராமத்திற்குள்..... குக்கிராமத்திற்குள் ஓர்
நகரம் இந்த கல்லூரி..... அந்த
நகரத்திற்குள் ஓர் சொர்க்கம்
எங்கள் விடுதி....!

அயல்நாட்டு ஆசையுள்ள
இவ்வூர் மக்கள்.... இந்த
கட்டிடங்களை அன்னாந்து பார்த்து
அவா தீர்த்து கொள்கின்றனர்…!

இக்கல்லூரி முதல்வர்
எங்கள் விடுதி தலைவர்......
காற்று பூக்களில் தவழ்வது போல….. இவரது
கன்னங்கள் புன்னகைக்க தவறியதில்லை…!

விடுதிகாப்பாளர்கள்...... இவர்களை
இந்தக் கூட்டத்தில் விட்டுப்பாருங்கள்
அடையாளம் காண உங்களுக்கு அரைநாள் வேண்டும்
தோற்றத்தால் அல்ல... இவர்கள்
தோழர்கள் என்பதால்.....!

இதயங்களை இணைக்கும் உலகப்பொதுமொழி
இந்த விளையாட்டு...,
விடுதி என்றாலே உடன் வந்துவிடும்
மெல்ல வழிகேட்டு....!

விளையாட்டிற்கென்றே ஒருவிழா…. இது
என் நண்பர்கள் கொண்டாடும் திருவிழா…!

இங்கே வந்த முதல்பொழுது என் நாட்காட்டியில்
விடுமுறை நாட்களே விருப்பம்
இப்பொழுது என் நாட்களெல்லாம்
விடுதியிலே தான் இருக்கும்…!

மாணவனுக்கும் கல்லூரிக்கும்
இடைவேளை இந்த இரவு
கிடைத்த இடைவேளையெங்கும் நிரம்பிவழியும்
நண்பன் என்ற உறவு…!

இக்காலத்தில்…..
சில்லறை சப்தங்களை விட
சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு
இரவே இரவல் கேட்டு கெஞ்சும் …!

எதற்காக விழித்தோம்… எதற்காக சிரித்தோம் …
என்றே தெரியவில்லை
இவையாவும் துக்கம் தொலைத்த
தூங்கா இரவுகள் …!

விடுதி துறந்த மாணவர்கள்………
இந்த கல்லூரிக் கிரிக்கெட்டில்
கல்லூரிக்கும் வீட்டிற்கும் ரன்கள் எடுத்தே
ரணமாய் போகிறார்கள்….
எங்களுக்கோ கல்லூரியும் வீடும் வேறுவேறு இல்லை
காலம் பற்றிய ஒரு வேதனையும் இல்லை…!

உணவு விடுதி……..
உலகம் காணாத COMPOSITE MATERIAL எல்லாம்
கணநேரத்தில் உருவாக்கிவிடும் ஓர் அதிசய இடம்…!
இந்த காலத்தில் ஒரே குடும்பமாயினும்
உணவுநேரம் என்பது வேறுவேறு…
ஒரே குடும்பமான எங்களுக்கு
உணவு நேரம் வேளை மாறாது ….!

இதே தொலைக்காட்சியை
வீட்டில் பார்க்கும் போது கார்கில் யுத்தமே வெடிக்கும்… எங்கள்
விடுதியில் வெறும் சத்தம் மட்டுமே கேட்கும்…!

சங்கீதத்தோடும் எங்கள் சட்டைகளோடும்
சடுகுடு ஆடும் சலவை இயந்திரம்…. எங்கள்
உடை அழுக்கை அதன்
உடலுக்குள் பூட்டிக் கொள்ளும்…!

புறாவிடுதூது…
இந்த நெரிசலில் இறக்கை விரிக்க இடமேது…!
தபால் விடுதூது….
தபால்தலைகள் பல தலைமறைவாகிவிடுகிறது…!
தோதான ஒரே தூது
மின்னஞ்சல் விடுதூது… இங்கே
தளமெங்கும் இணையதளம்
அது எங்கள் பக்கபலம்….!

ஒரே அறையில் இருந்து கொண்டு
உலகைச் சுற்றி வர வேண்டுமா
கையில் ஒரு புத்தகமும்
கடுகளவு கற்பனையும் இருந்தாலே போதும்
உலக அறிவின் தூதகம்
எங்கள் விடுதி நூலகம்…!

அவசரமென்றால் அர்த்த சாமத்திலும்
அக்கறையாய் வரும் உதவி இது
விண்மீனுக்கடுத்து விடியல் வரை
விழித்திருக்கும் அவசர ஊர்தி அது…!

தனியறையென்ற வசதியுண்டு
அந்த அறைதான் தனிமையில் வாடுகிறது
உடமைகளுக்கு மட்டும் உரித்தானது
உறங்கமட்டும் என்றானது…!

கல்லூரி எமக்கு வானம் தந்திருக்கலாம்
விடுதி எமக்கு சிறகு தந்திருக்கலாம்
பறக்க கற்று கொடுத்தது என்னவோ
என் தோழர்களே……. இங்கே
எங்கள் இதயங்கள் இணைக்கபடவில்லை
தைக்கப்பட்டிருக்கின்றன……..

தேர்ச்சி பெற்ற ஆசிரியரின்
மூர்ச்சியடையச் செய்யும் வகுப்புகள் கூட தோற்று போகும் தேர்வின் முதல் நாள்
எங்கள் கூட்டுப்படிப்பு முன்னால் ……….!

என் நண்பர்களும் ஆன்மீகவாதிகளே …… கீதாசாரத்தை கிருஷ்ணருக்கு கற்றுகொடுத்தவர்களே இவர்கள்தான்
உதாரணம்….
இன்று எது உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையது
எதை கொண்டு வந்தோம்
அதை இழப்பதற்கு……!

நட்சத்திரங்கள் இல்லாத வானம்… என்
நண்பர்கள் இல்லாத இந்த வளாகம்
இரண்டுமே ஒன்றுதான்…!

நிலா உடைந்து போனாலும்
பாலைவனத்தில் பூக்கள் பூத்தாலும்
தங்கம் விலை மெலிந்தே போனாலும்
நண்பர்கள் மாறுவதில்லை எங்கள்
நட்பு மறைவதுமில்லை….!


இந்ந கவிதைக்கு முற்றுபுள்ளி வைக்க
என்னைப் போலவே என் பேனாவும் தயங்குகிறது
இந்த கரவொலியோடு என்
கல்லூரி வாழ்க்கையும் கரைந்துவிடப்போகிறதா…..இல்லை
நட்புக்கும் பிரிவிற்கும் சம்பந்தமே இல்லை….!

மழைகொண்ட மேகங்கள் நாங்கள்
மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்…. இன்று
மழைதுளிகளாய் பிரியப் போகிறோம் …. இருந்தாலும்
எங்கள் ஞாபகங்கள் மலை போல
காலம் கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்து விடுவதில்லை...!
தேடலுடன்

#தீபன்#
 

 

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...