திங்கள், மார்ச் 29, 2021

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. அதற்குள் எழுந்தான். தூக்கத்தில் இருந்து அல்ல. இரவெல்லாம் கண்ட கனவிலிருந்து. இப்படி ஒரு நிகழ்வு யாருக்கும் அமைந்திருக்குமா என தெரியாது. ஆனால் அவனுக்கு அமைந்தது அதிர்ஷ்டம் தான். அதிகாலையில் பெண் பார்க்கும் வைபவம். சட சட வென பாய் மற்றும் போர்வைகளை சுருட்டி பக்கத்தில் படுத்திருந்த ராகேஷ்க்கும் தான் எழுந்தது தெரியும் படி பெருமூச்சு ஒன்று விட்டான். அவனோ கண் திறந்தால் தூக்கம் தப்பித்து ஓடிவிடும் என தெரிந்தவனாய் இறுக்கி பிடித்து வைத்து கொண்டிருந்தான். சிவப்பு வாளி பாதிக்கும் மேல் ஓட்டை என்பதால் நீல வாளி எடுத்து குளிக்க கிளம்பினான். வெறும் விரல் நுனியை நனைத்தற்கே உடல் முழுதும் நடுங்கியது. இதில் எப்படி உடல் முழுதும் நனைப்பது என நினைத்து கொண்டே முதல் கப் தண்ணிரை தலையில் ஊற்றினான் சேதுபதி. 

 தலை துவட்டிக் கொண்டே வெளியில் வந்து கண்ணாடியில் தன் பளிச் முகத்தை பார்த்தாள் ஊர்வசி. நேரம் ஐந்தை தொட்டுக்கொண்டிருந்தது. தலை நிறைய மல்லியும், கைகளில் கண்ணாடி வளையல்களும், கால்களில் கெட்டி கொலுசும் கொண்டு புறப்பட்டு தயாரானது அந்த மஞ்சள் சுடிதார் கிராமத்து மைனா. முதல் நாள் இரவே தேவையான அனைத்தையும் எடுத்து வைத்ததால் பாதி வேலை இல்லை. மேக்கப் போடும் பழக்க வழக்கம் இல்லை என்பதால் மீதி வேலையும் இல்லை. சீக்கிரம் கிளம்பி வெளியே வந்தாள் சிட்டு போல. அவளுக்கும் முன்னரே எழுந்து கிளம்பி வாசலில் உட்கார்ந்திருந்தார் அவளின் அப்பா ராஜேந்திரன். இருவரும் நுங்கம்பாக்கம் இரயில் நிலைத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு இரயிலுக்காக உட்கார்ந்தனர். 
 
காலை 5:30 மணி. உறைந்திருந்த பனியை தன் சத்தத்தால் கிளித்துக் கொண்டு வந்து நின்றது மின்சார இரயில். பெண் பார்க்க போகும் முன்னரே பெண்கள் பெட்டியின் முன்னால் நின்று விட்டான் சேது. பிறகு ஓடிச் சென்று பொதுப் பெட்டியில் ஏறிக் கொண்டான். 'இது ஊரப்பாக்கம் இரயில் நிலையம். சேருமிடம் சென்னைக் கடற்கரை' என்று இடைவிடாது மூன்று மொழிகளில் முழங்கி கொண்டிருந்தாள் அந்த தானியங்கி ஒலிப்பான். எண்ணிப்பார்த்தால் இவனையும் சேர்த்து ஆறு பயணிகள். சன்னலோர சீட்டில் சாவகாசமாய் உட்கார்ந்தான். வண்டி முன் செல்ல காற்றும், மின்கம்பங்களும், கற்களும் பின்னால் சென்றது. பெருங்களத்தூரை கடக்கும் போது தான் அவன் நினைவும் பின்னால் சென்றது. நான்கு மாதங்களுக்கு முன் அவன் அப்பா, அம்மா ஊரிலிருந்து வந்து அவனை பார்த்துவிட்டு சென்ற நியாபகம். பெருங்குளத்தூரில் பேருந்து ஏற்றிவிடும்போது அவன் அம்மா அழுதது சாரல் போல் அவன் இதயத்தில் தெறித்தது. 'இந்த பொண்ணாவது உனக்கு அமைஞ்சிரும்னு பார்த்தோம். இதுவும் அமையல. எப்போ தான் உனக்கு ஒரு விடிவுகாலம் வருமோ' என அம்மா கூறிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்து கொண்டிருக்கும் போது சுளீர் என்று சூரிய வெளிச்சம் அடித்தது. நினைவிலிருந்து மீண்டான். தானியங்கி ஒலிப்பான் ஒலித்தது. 

 'இது மீனம்பாக்கம் இரயில் நிலையம், சேருமிடம் செங்கல்பட்டு இரயில் நிலையம்' பெரிய மற்றும் சின்ன பையை அவளின் அப்பா எடுத்துக்கொண்டு இறங்க கைப்பையுடன் மட்டும் அவள் இறங்கினாள். இரயில் மெதுவாக நகர துவங்கியதும் ராஜேந்திரன் செல்போனை எடுத்து '46' என முடிந்த அந்த போன் நம்பரை தேடினார். கடைசி ரெண்டு மூனு நம்பரை நியாபகத்தில் வைத்து கொள்ளவதே பெரியோர்களின் யுக்தி. சரியாக அந்த நம்பரை எடுத்து பச்சை பட்டனை அழுத்தினார். போன் ரிங் போகவில்லை. சிவப்பை அழுத்தி மீண்டும் பச்சையை அழுத்தினார். அதே தான் மீண்டும். தன் மகளை பார்த்து அவள் போனில் ஒரு முறை போன் பண்ண சொன்னார். அவள் சிறிது வெட்கம் கலந்த தயக்கத்துடன் டயல் செய்து காதுக்கு சிறிது தொலைவில் வைத்தாள். இந்த முறையும் நம்பர் தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் இருந்தது. இனி காத்திருந்து பயனில்லை என்று ஏர்போட் நோக்கி நடக்க தொடங்கினர் இருவரும். அப்பாவின் நடையில் மாற்றத்தை கண்டாள். இந்த முறையும் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் கடமை நிறைவேறாமல் போனதால் வந்த வருத்தம் தந்த நடுக்கம். புரிந்து கொண்டவளாய் சின்ன பையை தான் வாங்கி கொண்டு அப்பாவின் கையை பிடித்து நடந்தாள். சென்னை விமான நிலையம் வெளிநாட்டு புறப்பாடு டெர்மினல் மூன்றாவது முறை அவளை அன்புடன் வரவேற்றது. ஆறுமாதம் அமெரிக்க புராஜெக்ட். ஆறுமாதம் இந்திய புராஜெக்ட். இது தான் கடந்த மூன்று வருடங்களாக மாப்பிளை தேடலுக்கு மத்தியில் அவள் பணிபுரியும் வேலை. 
 
வேலைக்கு இன்று ஒரு மணி நேரம் பெர்மிசன் என்ற தகவல் அனுப்புவதற்காக போனை எடுத்தான் அவன். அப்போது தான் தெரிந்தது நெட்வொர்க் இல்லாமல் பொம்மை போனாக இருந்தது. ஒரு முறை ஆஃப் செய்துவிட்டு ஆன் செய்தான். இரயில் நின்றது. இறங்கியதும் தன் முழு நெட்வொர்க்குடன் ஆன் ஆனது அவனது மொபைல். வரிசையாய் மூன்று மிஸ்டுகால் மெசேஷ். இரண்டு அவன் சேமித்து வைத்த ஊர்வசி அப்பா என்னும் நம்பர். இன்னொன்று ஒரு புதிய நம்பர். புதிய நம்பர் யாரென்ற குழப்பத்தில் முதலில் அந்த நம்பருக்கு போன் செய்தான். 'அப்பா அவங்க தான் பேசுறாங்க' என்ற கபடமற்ற அந்த குரலையும், வார்த்தையும் கேட்டவன் முதன்முதலாய் அவன் வாழ்வில் விடியலை உணர்ந்தான். அப்பாவிடம் அவன் நெட்வொர்க் பிரச்சனையை சொல்லிக் கொண்டிருக்கும் போது விமான நிலைய தானியங்கி ஒலித்தது. 'Last Five more minutes for USA flight check-in, passengers are requested to checkin immediately' என்ற சத்தம் அவனுக்கு போனில் கேட்டது. 'அப்பா அவுங்கள சீக்கிரம் டி4 டெர்மினல் வரச் சொல்லுங்க' என அவள் கூறியதும் கேட்டது. அப்பா அதை திரும்ப சொல்லும் முன்னே அவன் தான் இரயில்வே ஸ்டேசனிலிருந்து கிளம்பிவிட்டதை சொல்லிவிட்டு வேகமாக நடக்க தொடங்கினான். 
 
முன்ன பின்ன ஏர்போர்ட் சென்றிதாத அவனுக்கு டி4 எப்படி போக வேண்டும் என தெரியவில்லை. இரயில்வே சப்வேயில் இறங்கி எந்த பக்கம் செல்வதென்று தெரியாமல் எதிர்பக்கம் சென்று விட்டான். வழியில் ஆட்களும், போர்டுகளும் தென்படவில்லை. இருந்தாலும் அலசி பார்த்து கண்டுபிடித்துவிடலாம் என்ற அலட்சியத்துடன் தவறான பக்கமே வேகமாக சென்று கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு போன் செய்ய போனை எடுத்தான். மீண்டும் நெட்வொர்க் பிராபளம். ஆஃப் செய்தான். 
அதற்குள் அந்த வழியாக ஒரு கால் டாக்ஸி சென்றது. வழி மறித்து கேட்டான். டாக்ஸி டிரைவர் காட்டிய பாதை அவன் வந்த திசை. நெற்றியில் அடித்துக் கொண்டு அவருக்கு ஒரு டாங்க்ஸ் சொல்லிக் கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினான். இந்த இடைப்பட்ட நேரத்தில் போனை ஆன் செய்ய மறந்தவிட்டான். தனக்கு நேரமாச்சு என அவள் செய்த கால் அரை கிமீ அருகில் இருந்த அவனை சென்று சேரவே இல்லை. அவளின் நான்கு அழைப்புகளுக்கு பின் அவளின் பெயரை ஒலிப்பானில் அழைக்க வேறு வழியின்றி உள்ளே செல்ல தயாரானாள். கிட்டத்தட்ட டி4 உள்ளே வந்த அவனுக்கும் அவளை அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் கண்ணாடி கதவினுள் நுழையும் போது அவன் அங்கே வந்து சேர்ந்தான். அப்பா ஊர்வசி என அவளை அழைக்க முயன்ற போது வேண்டும் என தடுத்து அவள் அந்த கண்ணாடி கதவிலிருந்து தூரத்தில் சென்று மறைவதை மரம் போல பார்த்து கொண்டிருந்தான். மல்லிப்பூ, வளையல், கொலுசு என மூன்று மட்டுமே அவன் கண்களிலும், அதில் சிந்திய ஒரு துளி கண்ணீரிலும். 

 பி.கு: வாட்ஸ்ஆப்ல வீடியோ கால் பண்ணி பேசிக்கலாம். இதுக்கா இவ்வளவு பில்டப் என கேட்பவர்களுக்கு - இது ஒரு 90's kids காதல் கதை.

சனி, மார்ச் 06, 2021

இரு சொட்டு கண்ணீர் துளி

அனலாய் கொதித்தது உடல்

அதிகமாய் துடித்தது இதயம்

எதற்கு இந்த அக்னிபரிட்சை

வசமாய்வந்து இப்படி மாட்டுவேனோ

கற்கண்டு கசந்தும் கடித்து கொண்டே

ரோஜாவுடன் ஒரு யுத்தம் நடத்தி

முடிவில் போகட்டும் என எடுத்து

சந்தனம் குங்குமம் சகிதம் முடித்து

சங்கடத்துடன் சிறுமுருவலுடன் முன்னேற்றம்!

உள்ளே குடும்பமாய் ஒரு கூட்டம்

நண்பர்கள் கூட்டம் மறுபக்கம்

கூட்டமின்றி குற்ற உணர்ச்சியுடன்

ஓரம்கட்டிய ஒற்றை மரமாய் நான்!

இந்த மாலை நமக்கு வாய்ப்பில்லை என்ற

கவலை கண்ணீர் ஒரு கண்ணில்.

அந்த மாலையுடன் நிற்கும் தங்கைக்காக

ஆனந்த கண்ணீர் மறு கண்ணில்.

கெட்டிமேள சத்தம்! பூக்கள் பறந்தன!

அனிச்சையாய் கவலை கண்ணீரை

துடைத்தது கைக்குள் இருந்த கைக்குட்டை.

மேடை - குற்றவாளி கூண்டாய் தெரிந்தது

புகைப்படம் - என்றும் ஒரு வடுவாய் அமையும்

வேண்டாம் என ரெண்டையும் கடந்தால்

பந்திக்கு முந்திய படைவீரர் கூட்டம்

ஒற்றை இருக்கை கிடைத்தும்

உட்கார்ந்ததும் வெறிச்சோடின

பயந்த பக்கத்து இருக்கைகள்!

பந்திக்கு பின்வாங்கியதும் மீண்டும்

படையெடுத்தன பக்கத்து இருக்கைகள்.

அடுத்த அடியெடுத்து வைத்த இடம்

மொய் எழுத மொய்த்த கூட்டம்

கல்லெறிந்ததும் கலையும் காக்கை கூட்டமாய்

கலைந்து சென்றது அந்த கடைசி இடமும்

கடமையை செய்து கடந்தேன் கடைசியில்!

மண்டபத்தின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என

அந்த ஆனந்த கண்ணீரையும் துடைத்தது

ஈரமாய் இருந்த அதே கைக்குட்டை

திருமணத்திற்கு வந்த திருநங்கை நான்!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...