சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

உதிர்வு

ஆனி காற்றில் சற்றே எதிர் நீச்சலடித்து பறந்து கொண்டிருந்தது அந்த பட்டாம்பூச்சி. அதன் பார்வையில் அன்று எந்த மலர்களும் விழவில்லை. இருந்தும் வெளிச்சம் குறைவதற்குள் ஒரு மலரையாவது அடைந்து மது அருந்தவேண்டும் என்ற வேட்கையில் அந்த தோட்டத்தின் செடிகளில் எல்லாம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. சூரியன் மேற்கை ஒட்டி நடைபயணம் செய்து கொண்டிருந்தது.
'நித்திலா! செடிகுள்ள போகாத. பூச்சி எதாவது இருக்க போகுது' என சத்தம் கேட்டதும் சற்றே மேலெழும்பி பறந்தது.
செடிக்களுக்கிடையே தென்றலாய் துள்ளி குதித்து வந்தாள் மழலை நித்திலா.
சில செடிகளோடு கை குலுக்கினாள்.
சில செடிகளோடு சினேகம் பேசினாள். சில செடிகளை தடவி கொடுத்தாள்.
எல்லா செடிகளிலும் ஒரு மலரை கிரீடமாக அணிந்திருந்த செடி அவளை தனியாக ஈர்த்தது. மெல்ல அந்த செடியிடம் நகர்ந்தாள்.
மெளனமாக அதன் மணத்தை நுகர்ந்தாள்.
அவளுக்கு பயந்து வட்டமிட்டு கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அவள் தயவால் ஒரு மலரை கண்டு கொண்டது. ஆனாலும் நெருக்க முடியாத நெருக்கடி நிலையில் வானில் வட்டமிட்டு கொண்டிருந்தாள் வண்ண மடல்காரி. இன்னும் இரண்டொரு மணித்துளிகள் தான் ஆயுள் அந்த மலர்க்கு.
இருந்தும் அதற்க்கும் பெரிய போரட்டம் நடத்த வேண்டியிருக்கும் போல.
ஒரு பிஞ்சு ஆயுதத்தால் கொலை செய்யப்படலாம். அல்லது பசியில் அலையும் அந்த ரெக்கைகாரிக்கு ஒரு வேளை உணவு கொடுக்கலாம். படபடப்பிலும், காற்றிலும் துடித்து கொண்டிருந்தன மலரின் இதழ்கள்.
அந்த மென்கைகள் காம்பை மெதுவாக பிடித்தது. பட்டாம்பூச்சி பட்டென்று அந்த மழலையின் பார்வையில் விழுந்து பக்கத்து செடியில் அமர்ந்தது. காம்பை பற்றிய கை, பட்டாம்பூச்சி பக்கம் திரும்பியது. மலருக்கு வந்தது காம்போடு போனது. இப்போது பட்டாம்பூச்சியின் ஆயுள்ரேகை பிஞ்சின் விரல்களில். அழுத்தம் வண்ணத்தை அழித்து கொண்டிருந்தது.
பட்டாம்பூச்சியை தூக்கிபிடித்து கொஞ்சி பேசி கொண்டிருந்தாள் அர்த்தம் இல்லா வார்த்தைகளால். கூட்டுப்புழுவாய் இருக்கும் தன் மகளை இனி பார்க்க முடியுமா? அவளுக்கு உயரே பறக்க யார் கற்று குடுப்பது?  செய்வதறியாது திகைத்தது சிக்கிய சில்க்'காரி.  ஒரு மரண வாக்குமூலம் அதன் இறக்கைகளில் எழுதப்பட்டு கொண்டிருந்தது.
இன்னும் மணந்து கொண்டிருந்த மலர், தன் ஆயுளில் மீதியை உதிர்க்க நினைத்தது. வீசிய சற்று பலத்த காற்றில் காம்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. பூ தரையில் விழுந்ததை கண்ட நித்திலா பட்டாம்பூச்சியை விட்டு, பூவை எடுத்தாள். தப்பி பிழைத்த பட்டாம்பூச்சி மீண்டும் அதே வட்டத்திற்க்குள் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்தது. பூவை கையில் எடுத்த நித்திலா அதன் இதழ்களை இன்னும் அதிகமாக விரித்தாள். அதன் மணம் அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டது.
'நித்திலா! வா கிளம்பலாம்' என்று அம்மாவின் சத்தம் கேட்டவுடன் அந்த பூவை கீழேவிட்டுச் சென்றாள்.
நிலவின் ஒளியில் அந்த பூவின் இதழில் ஒரு துளி நீர் மின்னியது. பட்டாம்பூச்சியின் கண்ணீர் அஞ்சலியாய்!

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஈர மணலில்...

           ஆழ்ந்த அமைதியான உறக்கத்தில் இருந்த அந்த சிப்பியை, சுழன்று வந்த அலையொன்று தூக்கிக் கொண்டு கரையில் விட்டுச் சென்றது. சில நொடிகளில் வந்த மற்றொரு அலை அதை மேலும் சிறிது தூரம் தள்ளிச் சென்றுவிட்டது. கருப்பையிலிருந்து வெளியே தள்ளப்பட்ட குழந்தை போல அனாதையாய் கிடந்தது சிப்பி.




          சற்று தூரத்தில் மணல்வெளில் மணல்வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர் சிறுவர் சிலர். சிப்பியைக் கண்ட சிறுமியொருத்தி அதையெடுத்து மணல்வீட்டின் உச்சியில் வைத்து மகுடமாக்கினாள்.

             இருள்போர்வையை வானம் மெல்ல இழுத்து போர்த்த மணல்வீட்டை தரைமட்டமாக்கிய சிறுவர் கூட்டம் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.
கடற்கரை மணலில் தள்ளாடியபடியே நடந்து வந்தான் ஒருவன். சிப்பியின் கூர்மையான பகுதி அவன் காலில் குத்திவிட, வலியில் துடித்தவன் வழியில் கிடந்த சிப்பியை தூக்கி தூரம் எறிந்தான் எரிச்சலுடன். கடலிடமிருந்து இன்னும் தூரம் சென்றது சிப்பி.
                     
                 காலை விடியலின் வெளிச்சத்தில் கடற்கரை அருகில் இருந்த அணிகலன் கடையை திறந்தான் கடைக்காரன்.அப்போது வாசலிலே கண்டான் அந்த சிப்பியை. சிறிய சேதம் கூட இல்லாத சிப்பியை கையில் எடுத்த அவன், எந்த சிற்பியின் கையும்படாமல் எவ்வளவு அழகாக செதுக்கப்படுள்ளது இந்த சிப்பி என வியந்தான். 

                   தினமும் முத்துக்கள், சிப்பி, சங்குகளுடன் தான் தொழில் செய்து வரும் அவனுக்கு இந்த சிப்பி தனியாய் தெரிந்தது. தான் தற்போது சிறப்பாய் செய்து வரும் முத்து மாலையுடன் அந்த சிப்பியை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தான். பெட்டகத்தினுள் வைத்திருந்த முத்துமாலையை எடுத்து சிப்பியுடன் வைத்து பார்த்தான். தாயுடன் சேய் இருக்கும்போது தான் அழகின் உச்சம் என நினைத்து கொண்டான்.பின்ப் அதனை அந்த மாலையுடன் கோர்க்க சிப்பியின் மேல் பகுதியில் சிறு துளையிட்டான். கூர்மையான பகுதிகளை சீர் செய்தான். பட்டை தீட்டிய வைரமாய் தோன்றியது. பின்பு மீண்டும் அந்த பெட்டகத்திற்குள் வைத்து மூடினான்.

                    உச்சிற்கு சென்ற கதிரவனின் வெட்கை தாங்க முடியாமல், நிழலும் அனைவரின் காலுக்கடியில் ஒளிந்து கொண்டது.அந்த மதிய நேரத்தில், அந்த கதிரவனினும் பொலிவாய் பெண்ணொருத்தி தோழிகளுடன் நடந்து வந்தாள். கடைவீதியின் இருபுறமும் இருந்த கடைகளில் அழகுசாதனபொருட்களையும்,அணிகலன்களையும் பார்த்தபடியும், ஒரு சிலவற்றை வாங்கி கொண்டும் வந்தனர் தோழிகள். நித்திலா மட்டும் எதையுமே கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. நேரான அதே நேரத்தில் சோகமான பார்வையுடன் கூட்டத்திற்க்கு நடுவில் தனிமையாக வந்து கொண்டிருந்தாள். அழகுசாதன பொருட்களிலையே கண்ணாக இருந்த தோழிகள் நித்திலாவை கண்டுகொள்ளவில்லை.


                      'பாவம் அவர் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும். வாளினால் உடலில் பல காயங்கள் வாங்கியவர், என் ஒற்றை வார்த்தையால் அவர் மனம் எவ்வளவு காயம் பட்டிருக்கும். சுவையை அறிய தெரியும் நாவிற்கு ஏன் அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு பேச தெரியவில்லை.' என தனக்குள்ளேயே தன்னைப் பற்றி கடுமையாக கோபித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.


                      எல்லா பெண்களும் அந்த கடையில் நின்று பார்ர்துகொண்டிருந்தனர். நித்திலாவும் அவர்கள் பின்னா சென்று நின்றாள். பெண்கள் கூட்டத்தை கண்டதும் கடைக்காரன் இத்தனை நாள் சிரமப்பட்டு செய்துவந்த முத்துமாலையை திறந்து காண்பித்தான். எல்லா பெண்களும் மொத்தமாய் முகம் சுளித்தனர் 'முத்து மாலையில் சிப்பியா?'


அனைவரையும் விலக்கி கொண்டு முன்னால் சென்ற நித்திலா 'மிக அருமையாக உள்ளது. இதை நான் வாங்கி கொள்கிறேன்'

பின்பு தன் தோழி முகில்வாகினியிடம் இதை என் கழுத்தில் அணிவித்து விடு' என்றாள்
சிறிது தயக்கத்துடன் அணிவித்துவிட்டாள் அவள்.

'இந்த மாலையில் அப்படி என்ன அழகு இருக்கிறது. ஒரு வேளை சிப்பி இல்லையென்றால் அழகாய் இருந்திருக்கலாம்' என்றாள் இளசெந்தினி.

'இந்த சிப்பி இடம் அளிக்கவிட்டால் முத்து பிறந்திருக்காது' என்றாள் சற்று குறுகிய புன்னகையுடன்.

வீடு திருப்பிய பின் மாலை நேரத்தில் அந்தி வானத்தை பார்த்தபடியே கிணற்றின் மேல் உட்கார்ந்திருந்தாள். அந்த சிப்பியை எடுத்து உதடுகளுக்கிடையே வைத்து கொண்டு முந்தைய நாள் மாலை பேசியதை எண்ணிக் கொண்டிருந்தாள்.

'போருக்கு செல்லும் நீங்கள் எதிரி நாட்டினரை நிலைகுலையச் செய்வீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் போர் எவ்வளவு காலம் நடக்குமோ? அவ்வளவு நாட்கள் உங்களை பிரிந்து எப்படி உயிர் வாழ்வேன்? உங்கள் நாட்டை காக்க புறப்படும் நீங்கள் உங்கள் உலகை காக்க என்று திரும்பி வருவீரோ!'

'நித்திலா! என் வாள் சுழலும் வேகம் தீர்மானிக்கும் உன்னை மீண்டும் நான் காணும் காலத்தை. என் மனம் முழுவதும் உன் நினைவு தான் நிறைந்துள்ளது.'

'நீங்கள் என்னைவிட நாட்டை தான் அதிகம் நேசிக்கிறீர்கள் போலும். பின்னர் எப்படி உங்கள் மனது முழுவதும் நான் இருப்பேன். நாடு நிரம்பியபின் சிறு மிச்சத்தில் தான் நான் உள்ளேன்.'

'உன் வருங்கால துணைவனை அனைவரும் வீரமற்றவன் என கூற வேண்டுமா நித்திலா. உன்னை சில காலம் பிரிவதினால் நமக்கிடையே உள்ள அன்பு அணுவளவும் குறையாது என் அழகே.'

'என் அன்பு குறையாது ஆயுளுக்கும். உங்கள் அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம் தான்'

'என் அன்பு குறைந்து விடும் என்று பயமா? என் ஆயுள் குறைந்துவிடும் என்ற பயமா?'

'உங்கள் வீரத்தின் மேல் பயமில்லை.'

'அப்படியென்றால் என் அன்பின் மீது தான் பயமா?'

'இல்லை.பிரிவின்மீது தான் பயம்.'

'பிரிவு நிரந்தரம் இல்லை நித்திலா. நம்பிக்கையுடன் என்னை வழியனுப்பு. வாளை கீழே வைத்த பின் என் கை முதலில் உன் கையை தான் பிடிக்கும்.

'உங்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும் மன நிலையில் நான் இல்லை. நான் வருகிறேன்.'


                                                                                                                                   -(வருவேன்)

வியாழன், அக்டோபர் 17, 2013

ஜாலி பயணம்..



விமானம் புறப்பட தயாராயிருந்தது.
கைபேசியை அனைத்து வைக்கும்மாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இன்னும் சில நொடிகளில் தரைக்கு விடை கொடுத்து, வானில் பறக்கும் முனைப்புடன் இருந்தது.
நொடி நெருங்கியதும் பயணம் இனிதே தொடங்கியது.
சிலருக்கு பிரயாணம். பலருக்கு பிரமிப்பு..


சில நிமிடங்கள் வரை எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு சமவெளி பகுதியில் தரை மோதி வெடித்தது...
பயணித்த 156ல் 155 பேர் பலி. விமானி உட்பட.

பிழைத்தது ஒரே ஒரு உயிர். மிருகக்காட்சி சாலைக்கு அழைக்கப்பட்டு சென்ற குரங்கு தான் அது.
விசாரணை அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியில் இருந்த இந்த குரங்கை கைப்பற்றினர்.

அதிகாரி1 : கருப்பு பெட்டியும் கிடைக்கல. உயிரோட யாரும் இல்ல. எப்படி விபத்துக்கான் காரணத்த கண்டுபிடிக்க.

குரங்கு: உயிரோட தான் நான் இருக்கேன்ல.

அதிகாரி2 : ஐயா, குரங்கு பேசுது

அதிகாரி1: அட ஆமாயா.. பேசாம(பேசி தான்) இது கிட்டயே விசாரிக்கலாம் போல.

அதிகாரி2: நமக்கு வேற வழி இல்ல.

அ1: விமானம் கிளம்பும் போது பயணிகள் என்ன பண்ணுனாங்க

கு: சீட் பெல்ட் போட்டுகிட்டு இருந்தாங்க

அ1: விமான பணிப்பெண்?

கு: எல்லாருக்கும் குட்மார்னிங்க் சொல்லிகிட்டு இருந்தாங்க

அ2: அப்போ விமானி?

கு: புறப்பட எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தனர்.

அ1: நீ?

கு: எல்லாறையும் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அ1: விமானம் புறப்பட்ட பின் 30 நிமிடம் கழித்து பயணிகள் என்ன பண்ணுனாங்க?

கு: பாதி பேர் தூங்கிட்டாங்க. மீதி பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க

அ2: விமானபணிப்பெண்?

கு : மேக் அப் போட்டுகிட்டு இருந்தாங்க.

அ1: விமானி?

கு: விமானத்தை இயக்கி கொண்டிருந்தார்.

அ1 : நீ?

கு: இப்பவும் பார்த்துகிட்டுதான் இருந்தேன்..

அ1: விபத்து நடப்பதற்க்கு சற்று முன்னால், பயணிகள் என்ன பண்ணுனாங்க.. யாரும் கைல துப்பாக்கி வச்சிருந்தாங்கலா?

கு: யாரு கையிலயும் துப்பாக்கிலாம் இல்ல. அப்போ எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.

அ2: விமான பணிப்பெண்?

கு: மேக் அப் போட்ட பின் எடுத்த போட்டவ பேஸ்புக்-ல அப்லோட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அ1 : விமானி?

கு: அந்த போட்டோவுக்கு கமெண்ட் பண்ணிகிட்டு இருந்தார்.

அ1: நீ?

கு: விமானத்த இயக்கி கொண்டு இருந்தேன்...........

சனி, ஜூலை 27, 2013

2.காதல் ஓட்டம்...

இதற்கு முன்



அந்த நொடி தான் அவளைக் கண்ட கடைசி நொடி என எனக்குத் தெரியும். இறுதியாண்டின் இறுதித் தேர்வை எழுதிவிட்டுச் செல்கிறாள் அவள். இன்னும் ஒரே ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறேன் நான். ஆனால் இப்போது காத்திருப்பதோ அந்த ஏழாவது பேருந்து என்னைக் கடக்கும் அந்த நொடிக்காக.
ஆறாவதாக வந்த பேருந்து. ‘பின்னால் ஒரு இளவரசி வருகிறாள்.. ஒதுங்கி நில் என்று அரண்மனை ஊழியர்கள் சொல்வது போல கண்ணில் புழுதியை வாரி இறைத்துச் சென்றது. கண்களை கசக்கினேன். கண்ணீர் வந்தது. தூசி விழுந்ததால் மட்டும் அல்ல என்று தெரிந்தது. ஒரு வழியாக கண்களை சரியாக திறந்து பார்க்கும் போது நுழைவாயிலிடம் விடைபெற்று சென்றுகொண்டிருந்தது அந்த ஏழாவது பேருந்து.
கல்லூரிக்கு உள்ளே கல்லூரிப் பேருந்து காத்திருக்கும் – மாணவர்களுக்கு
கல்லூரிக்கு வெளியெ நகரப் பேருந்துக்கு காத்திருக்கும் – மாண்வர்கள்
நான் காத்திருப்போன் பட்டியலில். நாளை மீண்டும்(மட்டும்) திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அமர்ந்தேன். இந்த பேருந்து நிறுத்தம் தான் நான் அவளைக் கண்ட முதல் இடம். இங்கிருந்துதான் ஆரம்ப்பித்தது என் காதல் ஓட்டம். ஆரம்ப்பித்து மூன்றாம் ஆண்டைத் தொடப் போகிறது. இன்று வரை நான் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறேன்.... ஒரு வழிப்பாதையில்.
இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை அவளிடம். என் பெயர் அவளுக்கு தெரியுமா என்று கூட தெரியாது. நான் இந்த கல்லூரி தான் என்று அவளுக்கு தெரியுமா என்றும் தெரியாது. என் பிம்பம் ஒரு முறையாவது அவள் கருவிழியில் பட்டதுண்டா என்றும் தெரியவில்லை.
முதலாம் ஆண்டின் முதல் வாரமே பழிகியது பேருந்து நிறுத்தமிடமும், அருகிலுள்ள கடையுடனும் தான். இன்னொரு நண்பன் வந்ததும் சேர்ந்து போகலாம் என்று பேருந்து நிறுத்தத்திலேயே அமர்ந்திருந்தேன் நான். 


அவள் வந்தால் நகரப் பேருந்தில். அது தான் அவளைக் கண்ட முதல் நாள். பேருந்திலிருந்து இறங்கினாள் அவள். அமர்ந்திருந்த நான் எழுந்தேன். அனிச்சையாய் மரியாதை அந்த அழ(கி)குக்கு. அவளை வர்ணிக்க அப்பொழுது வார்த்தை தெரியவில்லை. அவள் மட்டுமே தெரிந்ததால்.
அவள் இறங்கியவுடன் பேருந்து நகர்ந்தது. நுழைவாயிலை நோக்கி நடந்தாள் அவள். நான் மட்டும் அசையவில்லை. அவள் தந்த போதையில் திடமாய் நின்று கொண்டிருந்தேன். திடிரென்று ஒரு பயம் நெஞ்சைக் கவ்வியது.
இவள் இன்று இங்கு நடக்கும் வங்கித் தேர்வை எழுத வந்த பெண்ணாக இருந்துவிட்டால். சட்டென்று போதை தெளிந்து நுழைவாயிலை நானும் அடைந்தேன். காவலாளியின் அறிவுறுத்தலின் பேரில் அடையாள அட்டை அணிந்தாள். அப்போது தான் உயிரே வந்தது. இவளும் இந்த கல்லூரி தான். இவளும் முதலாமாண்டு தான். இருந்தாலும் நெஞ்சைக் க்வ்விய பயம் இன்னும் சிறிது கவ்வி தான் இருந்தது. எந்த துறையில் படிப்பவள் இவளோ என்று.
இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தோம். ஒரு வாரம் ஆனாலும் புதிதாய் தெரிந்தது கல்லூரி அன்று மீண்டும். அவள் ஒவ்வொரு அடியாய் முன்னே நடந்து செல்ல செல்ல என் நெஞ்சைக் கவ்விய பயத்தின் இறுக்கமும் அதிகமானது.
கணிதவியல் துறை. அவள் நுழையவில்லை.
இறுக்கம் சற்று தளர்ந்தது.
கணினிஅறிவியல் துறை. அவள் கடந்து சென்றாள்.
இறுக்கம் இன்னும் சற்று தளர்ந்தது.
அடுத்ததுத்து இரண்டு துறைகள். அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
 இறுக்கம் மேலும் மேலும் தளர்ந்தது.
அடுத்து வேதியியல் துறை. என் துறை. அவள் நுழையமாட்டாளா. மூச்சு முட்டியது. இறுக்கம் மேலும் அதிகமானது.
பல நாட்கள் பழகிய பின் பிரிந்து சென்றதைப் போல் வலியைத் தந்தது அவள் இயற்பியல் துறைக்குள் நுழைந்தது.

(-தொடரும்)

திங்கள், ஜூலை 08, 2013

ஒரு நாள்...ஒரு நொடி...



கண்களுக்கு இமை இருப்பதால் இழுத்துப் போர்த்திக் கொண்டு அடம் பிடிக்கின்றது...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிகிறேனே என்று. காதுகளே.. நீங்கள் மட்டும் ஏன் சீக்கிரமே எந்திரிச்சிரிங்க. காலை(விடியல்) முதலில் தொடுவது செவியைத் தான் போல.
இரகசியமா ஒட்டு கேட்டிருக்கும் போல ஜன்னலோரம் விளையாடிக் கொண்டிருந்த சிட்டுக்குருவி ஜோடி ‘நாளைக்கு 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கனும்னு நான்  செல்பேசில பேசுனத. செல்பேசியினால் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து என சிட்டுக்குருவிகளின் உளவுத்துறையில் இருந்து அதற்கு தகவல் வந்திருக்கலாம். மறக்காமல் அதே ஜன்னலோரம் வந்து என்னை எழுப்பிவிட்டது அதன் தாய்மொழியில் ஜோடி சிட்டுக்குருவிகளில் ஒன்று மட்டும்.
7:30 மணி காட்டியது கடிகாரம் சாப்பிட உட்காரும் போது. மணியுடன் ஜன்னலோர அதே சிட்டுக்குருவியின் பிம்பத்தை பிரதிபலித்தது கடிகார கண்ணாடி. இக்கடிகாரத்தை பார்த்துதான் என்னை எழுப்பிவிட்டியானு அதன் தாய்மொழி தெரியாததால் என் தாய்மொழியில் எனக்கு நானே கேட்டுகொண்டேன் என் தாய்மொழி அதற்கு தெரியாது என்பதால்.
23.5டிகிரில் சாய்ந்து கொண்டே பயணிக்கும் பூமியைப்போல் கூட்டத்தால் ஒரு பக்கம் சாய்ந்தே வரும் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்(கள்) கல்லூரிக்கு. சீட்டில் சுகமாக உட்கார்ந்து வரும் அவங்களுக்கும் அதே கட்டணம். கடைசி படியில் ஒரு காலின் நுனியும், ஜன்னலோர கம்பியை பிடித்திருக்கும் கைகளை தவிர பேருந்திற்கு வெளியே இருக்கும் எனக்கும் அதே கட்டணமா என கேட்க வாய் திறக்கும். ‘அதனால் என்ன? உன் புத்தகங்கள் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் மடியில் பயணம் செய்கின்றதே என மனம் வாயை அடைத்துவிடும். உடம்பை படியில் தொங்க விட்டு மனம் எங்கோ பயணம் செய்யும் அப்பயணத்தில். இறங்கும் இடத்தில் மீண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்.
பொதுவாக நுழைவாயில் தான் தொடக்கம். ஆனால் இங்கு நுழைவாயில் தான் முடிவு... பிரமாண்டத்திற்கு, அழகிற்கு, சுத்ததிற்கு...
கணித ஆசிரியர். மனம் மூளையிடம் ஆலோசனை கேட்கிறது ‘இவரிடம் என்ன பொய் சொல்லலாம் என்று. போர்வீரனைப் போல தயாராக உள்ளது வாய்... பொய்க்காக. அவருக்கு தெரியும் எனக்கு இன்னைக்கு தேர்வு இல்லையென்று. அதனால் வீட்டில் சொன்ன அந்த பொய்யை இவரிடம் சொல்ல முடியாது. வலது மூளையும், இடது மூளையும் இணைந்து சட்டென்று சொல்லிக்கொடுத்தது உதடுகளுக்கு. உதடுகள் எதுவும் தெரியாத சிறு குழந்தை போல அப்படியே ஒப்பித்தது “நாளைக்கு பரிட்சைக்கு படிக்க வந்தேன் ஸார்
நானும் கண்களும் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தோம். மணி பார்க்க சொல்லி கண்களை அடித்தது மூளை. 9:57AM. இன்னும் மூன்று நிமிடங்கள் தான்... தேர்வு ஆரம்பிக்க. கால்கள் தரையில் பரந்தும் ஒரு நிமிடம் ஆனது தேர்வு நடைபெறும் வளாகத்தை அடைய.. இப்பொழுது கால்கள் பறப்பதை நிறுத்தி கண்கள் பறக்க ஆரம்பித்தன. பி.எஸ்சி(பிசிக்ஸ்) தேர்வு எண் 223192.
என் கண்களில் பட அரை நிமிடத்திற்க்கும் மேல் ஆயின.
முதல் தளம், புது வளாகம், அறை எண்:13
கண்களுக்கு முடிந்தது தேடல். இனி கால்களுக்கு தான்.
9:59AM,  புது வளாக நுழைவாயில். இன்னும் ஒரு நிமிடம் என்ற மகிழ்ச்சி அடுத்த நொடியே போனது.
“தம்பீ... பரீட்சை இருக்குறவங்க மட்டும் தான் உள்ள போகலாம். இல்லைனா போக கூடாது- காவலாளி

கணித ஆசிரியரிடம் சொன்ன பொய் பொய்யானது. சொன்னது உண்மையானது. புத்தகம் எடுத்தேன். கனிம வேதியியல். பொழுது போக்கினேன்.
12:58PM.. எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
1:05PM… இன்னும் பார்க்கவில்லை. புது வளாகம் காலியானது என்னை தவிர.
கல்லூரி பேருந்துகள் அணிவகுத்து நின்றன... கிளம்புவதற்கு.
முதல் பேருந்து அருகில் நான்.
ஏழாவது பேருந்தில் ஏறினாள் அவள்.
அவளை கண்ட அந்த ஒரு நொடி தான்.... என் அன்றைய ஒரு நாள்

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...