போருக்கும், காதலுக்கும் சிறுதுளி தான் வித்தியாசம்.
தனக்காக பிறரை அழிப்பது - போர்
பிறருக்காக தன்னையே அழிப்பது - காதல்
வெளியே காட்டும் வீரம் - போர்
மறைத்து வைக்கும் வீரம் - காதல்
எதிரியை வெல்லும் தந்திரம் - போர்
தன்னையே தோற்கடிக்கும் மந்திரம் - காதல்
வரலாற்றுக்கரையில் போரைப் போலவே
காதலும் ஆழமாக கால் பதித்து சென்றுள்ளது.
சில இடங்களில் இரண்டும் ஒரே இடத்தில் ஆழம்
பார்த்து சென்றுள்ளது.
தடம்-1
அக்பர்- தாஜ்மஹால் தலைமுறையின் முன்னோடி.
அனார்கிளி என்ற அழகியின் மேல் அளவில்லா காதல்
அக்பரின் மகன் சலீம்க்கு. இதை விரும்பாத அக்பர் அவர்களின்
காதலுக்கு சிகப்பு கொடி காட்ட, வெள்ளை
கொடி காட்டாமல்
துணிந்து போருக்கு தயாரானார் சலீம். பதவிக்காக அன்றி
தன் காதலுக்காக தன் அப்பாவிற்கு எதிராகவே போர் புரிந்தார்.
துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தார். தோல்வியால்
விரக்தியடைந்த அனார்களி உயிருடன் கல்லறை புகுந்து
காதல் இறவாமல் உயிர் மட்டும் துறந்தார்.
தடம்-2
தன் எதிரி நாட்டு அரசனின் மகளான சயுக்தா மீது காதல் மூண்டது
பிரித்திவிராஜ் சவுக்கானுக்கு. சம்யுக்தாவின் சுயம்வரத்திற்கு அனைத்து
நாட்டு இளவரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அவளின் அப்பா.
பிரித்திவி மீது வெறுப்பு கொண்ட அவர், அவனுக்கும்
மட்டும் அழைப்பு
அனுப்பவில்லை. மேலும் அவனை இழிவு படுத்தும் நோக்கில் அவன்
உருவசிலையை களிமண்ணில் செய்து அதனை வாயிற்காவலனாக
நிறுத்தி வைத்தார். சுயம்வரத்திற்கு வந்த அனைவரும் அதனை பார்த்து
சிரித்தபடி உள்ளே சென்றனர். தான் வென்றுவிட்டதாக உள்ளுக்குள் பூரித்துகொண்டார் சயுக்தா அப்பா.
சுயம்வரம் இனிதே ஆரம்பித்தது. மணமாலையுடன் வந்த சயுக்தா அனைத்து
நிஜ அரசர்களையும் தவிர்த்து சிலையான பிரித்திவிக்கு மாலை அணிவித்தாள். சிலைக்கு மாலையிட்ட சம்யுக்தாவின் கரங்களை பற்றிக் கொண்டு கவர்ந்து சென்றான். சினத்தில் தோல்வியில் முகம் வெளிறி நின்றார் பிரித்திவியின் மாமனார்.
தடம்-3
ராஜஸ்தானை ஒட்டிய தற்போது பாகிஸ்தானின் ஒரு சிறு பகுதியை
ஆட்சி செய்தவன் மகேந்திரா. ஒருநாள் வேட்டைக்கு செல்லும் போது
அவன் பார்த்து மயங்கிய தேவதை தான் மூமல். இருவருக்கும் இடையில்
இதயவேட்டையில் காதல் மலர்ந்தது.
இருப்பதிலேயே மிக வேகமாக பயணிக்கும் ஒட்டகத்தை தேர்வு செய்து
அதில் பயணித்து தினமும் இரவில் தன் காதலியை காண வருவார்.
மறுநாள் விடியும் அரண்மனை திரும்பிவிடுவார். ஒருநாள் இதை கண்டு
கொண்ட அவர் குடும்பத்தினர் அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டினர்.
இதனால் மகேந்திரா அவளை சென்று காண முடியாது என்று நிம்மதி
அடைந்தனர்.
மனம் நொந்த அவர், தன்
காதலியை காண வேண்டும் என்ற ஆர்வத்தை
தொலைக்கவில்லை. வேறொரு
ஒட்டகத்தை தயார் செய்தார். புதிய ஒட்டகம்
தவறுதலாக பாமீர் பக்கம் அழைத்து சென்றுவிட்டது. உச்சி இரவில் தான் வழி தவறியது அவருக்கு தெரிந்தது. வழியை திருத்தி காதலியின் ஊருக்கு
ஒட்டகத்தின் கால்கள் திரும்பின.
காதலன் வருவான் என்ற ஆசையில் தூக்கத்தை தூரம் வைத்து இரு விழிகள்
இணையாமல் காத்து கொண்டு இருந்தாள் மூமல். அவளின் வருத்ததை அறிந்த அவளின் சகோதரி காதலன் போல் ஆண்வேடம் தரித்து அவளை
மகிழ்விக்க நினைத்தாள். ஆனால் மூமல் சிறிதும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. காதலனை காணாத ஏக்கமும், வருத்ததுமே
நிறைத்திருந்தது அவளை. அப்படியே படுக்கைக்கு சென்றாள். அவள் சகோதரியும் அந்த ஆண் வேடத்தை கலைக்காமல் அவள் அருகில் படுத்தாள்.
பின் இரவில் காதலியை காண வந்து சேர்ந்த மகேந்திரா அதிர்ச்சியடைந்தார்.
தன் காதலியுடன் படுக்கையில் இன்னொரு ஆண் இருப்பதை கண்டு மனம் நொந்து அரண்மனை திரும்பினார்.
தன் காதலன் இரவு முழுதும் வராததால் கலக்கம் அடைந்த மூமல் அவர்
தன்னை மறந்துவிட்டதாக நினைத்து வருந்தினாள். விறகுகளால் சிதை மூட்டி அதில் பாய்ந்து தன் உயிரை எரித்தாள் அந்த இன்னொரு காதல் கண்ணகி.
காதலும் கடந்து போகும். அழியா தடமாக!