செவ்வாய், ஜூன் 24, 2014

வைரஸ் பேனா



VIQ
VVIQ
VVVIQ
VVVVIQ...

பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிகமாக புத்தகங்களை ஆக்கிரமித்த சொற்கள் இவை. இது 2005ல் கேட்ட கேள்வி(அப்படினா VIQ னு போடனும்னு அர்த்தம்.) இது 2004, 2005 ல் கேட்ட கேள்வி(VVIQ-Very Very Important Question னு அர்த்தம்) இப்படியே VVVVIQ வரை செல்லும்.

அப்படி VVVVIQ வாங்கிய ஒரு கேள்வி 'நீயுட்டனின் பொது ஈர்ப்பு விதி'.
'An appple a day keeps doctor away' என்ற பழ'மொழியை 'An Apple in one day made our school life worser' என புதுமொழி உருவா(க்)கும் அளவுக்கும், இயற்பியலின் மீது நல்ல வேதியியல்(அதாங்க இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுறது) உருவாகாமல் போனதுக்கும் இந்த ஈர்'ப்பு விதியும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.


"இரு பொருளகளுக்கு இடையேயான ஈர்ப்பியல் விசையானது அதன் நிறைகளுக்கு நேர்விகிதத்திலும், அவற்றிற்க்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்"

 இதற்க்கு உதாரணமாக புவிக்கும், நிலவுக்கும் இடையேயான ஈர்ப்பியல் விசை குறிப்பிடபட்டிருக்கும். மேலும் கடல் அலைகளுக்கும் இது தான் காரணம் என கேள்விக்கான விடை முடியும்.


புவிக்கு ஏதோ காந்த சக்தி உள்ளது. நிலவுக்கும் அது போல் இருக்கலாம். என்வே அவற்றிற்க்கு இடையே (காந்தவியல்) ஈர்ப்பு விசை இருக்கலாம். ஆனால் நிலவுக்கும், கடல் நீருக்கும்; புவிக்கும், நமக்கும் எப்படி ஈர்ப்புவிசை சாத்தியம்.??
கடல் நீரின் மீது செயல்படும் நிலவின் ஈர்ப்பு விசை நம் மீதும் செயல்படுமா??(அமாவாசை வந்துருச்சா என்று முட்டாள்தானமாக பேசுபவர்களை மொக்கைதனமாக கலாய்ப்பவர்கள் உண்மையில் கவனிக்கபட வேண்டியவர்கள், கீழ்பாக்கத்தில் அல்ல. பிர்லா கோளரங்கத்தில்)


முதலில் நீயுட்டன் 'இரு காந்த பொருட்களுக்கு இடையே' என தனது விதியை ஆரம்பிக்கவில்லை. 'இரு பொருட்களுக்கு இடையே' என எந்த மத, இன. சாதி பாகுபாடு இன்றி அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பொதுவாக அளித்துள்ளார்.ஆக எனக்கும், அலைபேசிக்கும்; எனக்கும், தொலைகாட்சிக்கும்; எனக்கும், மடிக்கணினிக்கும் இடையே ஈர்ப்பியல் விசை இருக்கதானே செய்யும்.(ஆனால் புத்தகமும், நானும் மட்டும் ஒரே துருவம் போல)

எனக்கும், என் அலைபேசிக்கும் இடையில் ஈர்ப்புவிசை இருந்தாலும் உண்மையில் அது மிக, மிக, மிக குறைவு(அறிவியல்பூர்வமாக மட்டுமே)
ஒல்லிபெல்லியில் கலந்துகொள்ளும் அளவிற்க்கு என் உடல் எடை(!) இருந்தாலும், செங்கல் போல் என் செல்லிடப்பேசி இருந்தாலும் Gன் மதிப்பானது G = 6.673×10-11 N m2 kg-2 என இருப்பதால் எங்கள் ஈர்ப்புவிசையை குறைத்துவிடுகிறது(என் அம்மாவின் திட்டைப் போல)
ஆனால் புவியின் எடையோ 5.972E24 kg என அதிகமாக இருப்பதால் சிறிய பொருளின் மீது கூட அதிகமான ஈர்ப்புவிசை செலுத்த முடிகிறது. இந்த ஈர்ப்புவிசையையே 'பூமியின் பொறுமை' என சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன போலும்.


நம் தமிழ்நாட்டில் மின்வெட்டு போல உலகில் ஒரு நாள் 'ஈர்ப்பியல்வெட்டு' நடந்தால் எப்படி இருக்கும்???
1) நம்ம கால் ரெண்டும் தரையில இருக்காது(எகிறிக் குதித்தால் வானம் கூட இடிக்கும்)
2) தொகுப்பாளிகள்(VJ’s) சிகை அலங்காரம் நமக்கும் வந்துவிடும்.(அதான் அந்த தலைவிரி (அலங்)கோலம்)
3) எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அழ முடியாது. சுழிய புவியீர்ப்பு விசையால் கண்ணீரால் வெளிவர முடியாது.(இது இயற்க்கையாகவே தொலைகாட்சி தொடர்களுக்கு(Serials) முற்றுபுள்ளி இடும்)
4) உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பிரிவினை இல்லாத பொதுவுடைமை சமுதாயம் உண்டாகும்.(ஆம், எல்லோருமே உயரே தான்)
5) மிக முக்கியமாக முதல்வர் அம்மாவிற்க்கு அவருடைய அமைச்சரவை சகாக்களிடம் தகுந்த மரியாதை கிடைக்காது(ஆம், அவர்களால் 90டிகிரி குனிந்து வணக்கம் செலுத்த முடியாது)
6) அதைவிட முக்கியமாக நம் எல்லோரும் ‘வைரஸ் பேனா வாங்கியிருப்போம்.
என்றெல்லாம் கற்பனை செய்ய கூடாது.
புவியின் ஈர்ப்புவிசை இல்லையென்றால் அடுத்த கனமே வளிமண்டலம் விடுபட்டு சென்றுவிடும். செல்வது வளிமண்டலம் மட்டுமல்ல, ந்ம் அனைவரின் மூச்சுக்காற்றும் தான்.

ஞாயிறு, ஜூன் 08, 2014

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...



கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!




பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

சனி, மே 10, 2014

மர்ம முடிச்சு




இவ்வுலகில் தனக்கு தானே பெயர் வைத்துக் கொள்ளும் திறமையும், உரிமையும் ஒன்றிற்கு மட்டுமே உள்ளது....அது என்ன????

மிகவும் வியப்பாக தான் இருந்தது... முதன்முதலில் இந்த கணினியின் சுட்டுவிரல்(அதன் சுட்டி) பிடித்து கணக்கிடுகையில். இருபதாம் வாய்ப்பாடு வரை பல நூறு தடவை படித்தும், எழுதியும் பார்த்ததால் தான் சில நிமிடங்களில் கணக்கிட கற்றுகொண்டேன். வாயில்லா இந்த கணினி எங்கு கற்றுக் கொண்டது மில்லிநொடியில்... மில்லியன் கணக்கிட. பதில் தெரியாமல் பள்ளியில் பைத்தியம் பிடிக்க வைத்த கேள்வி...


கல்லூரியில் முதலாமாண்டு தான் தெளி(ரி)ந்தது. நம் கணினிக்கும் சொல்லித்தான் குடுக்கிறார்கள்.. ப்ரோகிராம்(நிரல்) என்ற பெயரில் புரிதலாக... அப்படியென்றால் நம் மூளையும் ப்ரோகிராம் செய்யப்பட்ட ஒன்றாகதான இருக்க வேண்டும். சுற்றுபுறத்திலிருந்து இன்புட்(உள்ளீடு) எடுத்துக்கொண்டு அதனை பிராசஸ்(பரிசீலனை) செய்து தேவையான கட்டளைகளை பிறப்பிக்கிறது. இந்த ப்ரோகிராமின் பெரும்பகுதி ஜீன் என்னும் சிப்பில் எழுதிவைக்கபட்டுள்ளது. மீதிபகுதியானது பேரண்டத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகமாக உள்ள நீயுரான்களில் நம்மால் எழுதப்படுகிறது. கணினியின் நினைவானது அதில் உள்ள ட்ரான்சிஸ்டர்களை அடிப்படையாக கொண்டது. இந்த டிரான்சிஸ்டர்களில் இரு வகையான ‘Gate’ உள்ளது.
1) Floating Gate
2) Control Gate

ஒரு Floating Gate ஆனது மற்றொரு floating gate உடன் control gate வழியாக இணைகிறது. நாம் கணிக்கு தரும் தரவுகள் அனைத்தும் இவ்வாறு இரு Floating Gate இணைவதின் மூலம் சேமிக்கப்படுகிறது. நாம் தரவுகளை அழிக்கும்போது மீண்டும் இந்த இணைப்பானது பிரிக்கப்பட்டு வேறொரு நினைவிற்க்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. 


இதேபோல் மூளையில் இரு நீயுரான்கள் இணையும் போது அங்கே தகவல்கள் சேமிக்கபடுகிறது. அந்த இரு நீயுரான்கள் ‘டைவர்ஸ் வாங்கும் போது நம் நினைவில் இருந்து அந்த தகவல்கள் அழிக்கப்படுகிறது.
இந்த மூளை தகவல்களை சேமிக்கும் விதம் மிகவும் வியப்பானது.
உதாரணமாக ‘தண்ணீர் என்ற வார்த்தையை நாம் நினைத்தவுடன் அதன் நிறம் நம் கண் முன்னே வந்து செல்லும். இது மூளையின் பின் பகுதியில் சேமிக்கபட்டிருக்கும். அதன் சுவையை நினைக்கும் போது மூளையின் முன் பகுதி அதை பற்றிய தகவலை தரும். தண்ணீரை தொடும்போது வரும் குளிர்ச்சியை நினைத்தால் மூளையின் பக்கவாட்டு பகுதி இப்படி தான் ஜில்லென்று இருக்கும் என சொல்லும்.

இந்த தகவல்கள் எல்லாம் முன் எப்பொழுதோ பல்வேறு புலன் உறுப்புகளால்(கண், மூக்கு, தோல்) மூளைக்கு அனுப்பபட்ட தகவல்கள். இந்த புலன் உறுப்புகள் மூளையின் எந்த பகுதியில் இணைக்கபட்டு இருக்கிறதோ, அந்த பகுதியில் தான் சேகரித்த தகவல்களை சேமித்து வைக்கிறது. சுருங்க கூறின் மூளைக்கும் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் உண்டு.

எத்தனை மந்திரிகள் இருந்தாலும் பிரதம மந்திரியாக ‘ஹிப்போகெம்பஸ் செயல்படுகிறது. தண்ணீரை பற்றிய மேற்கூறிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்துஇது தான் தண்ணீர் என சேமித்து வைக்கிறது(தண்ணீரை அல்ல.... தகவலை!!!)

கணினியில் ‘0 & ‘1 என பதியப்படும் தகவல்கள் மூளையில் எவ்வாறு பதியப்படுகின்றன???

முதலில் கொஞ்சம் ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகனும். நரம்பு செல்களுக்கும்(நீயுரான்கள்), சாதாரண செல்களுக்கும் இடையில். இவ்விரு செல்களும் இணையும் இடத்திற்கு ‘ஸினாப்ஸ் என்று பெயர். இவ்விரு செல்களும் உரசி செல்லும் போது வேதியியல் மின்சாரவியலாகிறது. நரம்பு செல் ‘மின்சாரம் என்மீது பாய்கின்றதே என பாடிக்கொண்டே அந்த தகவலை மூளைக்கு எடுத்துச் செல்லும் சாதாரணசெல் உரசிய மயக்கத்தில்...

பின் அந்த மின்தூண்டல் மீண்டும் ஒரு ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் செய்து இரு நீயுரான்களை இணையச் செய்து நினைவாக சேமிக்கிறது.
உங்கள் மூளையின் சில மில்லியன் நீயுரான்களுக்கு முடிச்சு போட நேரம் ஒதுக்கியதற்க்கு நன்றி...
மீண்டும் சந்திப்போம்....


  


செவ்வாய், ஏப்ரல் 01, 2014

கட்டியணைத்து...முத்தமிட்டு...




கட்டியணைத்து
முத்தமிட்டு
கொஞ்சி விளையாடிய
தவழும் குழந்தை
எட்டி உதைத்து
மறந்துவிடுகிறது இந்த பூமியை...
நடக்க தெரிந்ததும்...

முன்னோக்கி நடந்தான் மனிதன்...
சற்றே வழுக்கியது இந்த பூமிக்கு...

குப்பைதொட்டி இல்லா தெரு இல்லை..
குப்பை உள்ள தொட்டியும் இல்லை...

தூசுவால் உருவான பூமி...
இன்று
மாசுவால் மயானமாகிறது...

மட்கா குப்பை(பாலீத்தின்) மண்ணையும்,
மட்கும் குப்பை(பணம்) மனதையும்
பாழ்படுத்தும் பண்பாட்டில் பயணிக்கின்றோம்...

சுற்றம் மட்டுமல்ல
சுற்றுச்சூழலும் தூரம் சென்றுவிட்டது
உலகை சுருக்கிய இந்த தொழில்நுட்ப யுகத்தில்...

பச்சை பட்டு உடுத்திய
இந்த பூமி
கற்பழிக்கபட்டு கொண்டே இருக்கிறது...
அதைக் கண்டு கண்ணீர் சிந்த
அந்த வானுக்கும் வற்றிவிட்டது...

கொஞ்சம் கொஞ்சமாக
இயற்க்கை எய்து கொண்டிருக்கிறது... இயற்க்கை
அதை காப்பாற்றுவது நம் கையில்...

Foolஏப்ரல்.1 முட்டாள்கள் தினம்(Fools Day) கொண்டாடுவதற்க்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன்.
இருந்தாலும் இன்று படிமநிலை எரிபொருள் தினம் (Fossil Fuels Day).
தோண்டி தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் என்றோ ஒரு நாள் கிடைக்காமல் நம்மளை முட்டாளாக்க போகிறது. அதற்க்காக கூட இந்த முட்டாள் தினம் கொண்டாடபடலாம்..

2000மெகாவாட் உற்பத்தி செய்யகூடிய ஒரு அனல் மின் நிலையம் ஒரு நாளைக்கு 20000டன் நிலக்கரியை எரிக்க வேண்டியுள்ளது. இந்த அளவுக்கு நிலக்கரியை எரிப்பதால் வெளிப்படும் சல்பர்-டை-ஆக்ஸைடும், நைட்ரஸ் ஆக்ஸைடும் எவ்வளவு  என்று கணக்கிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எரிப்பதால் மட்டும் அல்ல. நிலக்கரியை வெடியெடுக்கும் போதும், எரிந்த பின் சாம்பலை வெளியேற்றும் போதும் கூட பெருமளவு மாசுபடுகிறது.


அனுமின்சாரத்தை விட அனல்மின்சாரம் பாதுகாப்பானது. குறைவான மாசுபாடு தான் உடையது என்றாலும் இன்னும் சில வருடங்களுக்கு மட்டுமே போதுமான இருப்பு இருப்பதால் அதனை குறைவாக உபயோகபடுத்தலே நலம்.

நம் கையில் என்ன இருக்கிறது??

நிலக்கரியில் இருந்து முக்கியமாக பெறப்படுவது மின்சாரம்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலின் மூலம் பர்ஸில் பணத்தையும், பூமியில் நிலக்கரியையும் சேமிக்கலாம்..

சன்னலை அடைத்து ஏசி காற்றில் இருப்பதை விட சன்னலை திறந்து ஓசி காற்றில் தென்றலுடன் கைகோர்த்து கவிதை கிறுக்கலாம்.

யார் மேலோ உள்ள கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக நம் துணியை அடித்து, கசக்கி, பிழிந்து துவைக்கலாம்.. , வாஷிங்க்மெஷின் இல்லாமலே..

களிமண்ணால் செய்யப்பட்ட பல பொம்மைகள் வைத்து கொலு கொண்டாடுவதை போல, ஒரு மட்பானை வாங்கி வைத்து குலு குலு என கொண்டாடலாம்....

மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றை சொந்தக்காரர்கள் போல் வைத்திருக்க வேண்டும்.. தேவைப்படும் போது வைத்துக் கொண்டு தேவை இல்லாதபோது அணைத்து வைக்கலாம்...

மொத்ததுல பழைய கற்காலத்துக்கு போகனும்... அப்படித்தன சொல்ல வர...
அப்படினு கேட்க தன இந்த மானிட்டர் பக்கம் கோபமா வரிங்க...

எதையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து அல்ல...
தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள் என்பதே உங்கள் பாதம் தொட்ட என் அன்பான வேண்டுகோள்.....



விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...